பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்
பெண்ணுக்குத்தான் எத்தனை மனம், தஞ்சை செல்வன், திருவரசு புத்தக நிலையம், பக். 408, விலை 150ரூ.
நாவலின் கதாநாயகி பூவரசி எழுந்து, வராந்தாவின் பக்கம் போய் நின்று, வானத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் மேல் பார்வையைப் பதிக்கிறாள். இந்த அழகான நட்சத்திரக் கூட்டத்திற்கு இடையே உலா வரும் பூமிப்பந்தின் மேல் வசிக்கும் மனிதர்களுக்கு, இப்படியெல்லாம்கூட துன்பங்கள் வருமா? என்று யோசிக்கிறாள் (பக். 203). மிகவும் நல்லவளான பூவரசிக்கு பல சோதனைகள். அவளை தன் மோச வலையில் சிக்க வைக்க முயல்கிறான் ஒரு தீயவன், கடைசியில் தர்மம் வெல்கிறது. நாவலில் ஆங்காங்கே சிந்தனைச் சிதறல்கள். சாலை மறியல் என்பதும் ஒரு வன்முறைதானே? மதம் சம்பந்தப்பட்ட கலவரம் மட்டும்தான் தீவிரவாதமா? இதுவும் ஒரு தீவிரவாதம் தானே? (பக். 59) என்று கேட்கிறார் தஞ்சை செல்வன். அருமையான கள வர்ணனைகள். பொழுது சாய, மெரீனா கடற்கரை மின்னொளியை, பொன் நகையாய் அணிந்து கொள்ள ஆரம்பித்த நேரம் (பக். 162) அழுத்தமான உரையாடல்கள், ஆழம் மிக்க பாத்திரப் படைப்புகள். -எஸ். குரு. நன்றி: தினமலர், 30/11/2014.
—-
தென்னிந்தியாவில் விஷ்ணு ஆலயங்கள் (தமிழ்நாடு), முனைவர் சித்ரா மாதவன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், பக். 352, விலை 225ரூ.
முனைவர் சித்ரா மாதவன் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள நூலை, புவனா பாலு தமிழாக்கம் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற 75 விஷ்ணு ஆலயங்கள் பற்றி விரிவான முறையில் எழுதி உள்ளார். ஒவ்வொரு ஆலயமும், இருக்குமிடம், தலவரலாறு, திருவிழாக்கள் முதலியவை குறித்து விரிவாகவும், தெளிவாகவும் துலலியமாகவும் ஆசிரியர் விளக்கி உள்ளார். அவை தலயாத்திரைக்கு மட்டுமின்றி, ஆய்வு முதலானவற்றிற்கும் பெரிதும் உதவும். நூலில், வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. தக்க படங்களுடன் அழகாக அச்சிடப்பட்டுள்ளன. விரிவாகவும், தெளிவாகவும் எழுதப்பட்டுள்ள இந்த நூல், வைணவர்களுக்கு மட்டுமின்றி, வரலாற்று ஆர்வலர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும். -பேரா. ம.நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 30/11/2014.