மக்கள் கவிஞரின் மனங்கவர்ந்த பாடல்கள்
மக்கள் கவிஞரின் மனங்கவர்ந்த பாடல்கள், வ. இளங்கோ, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், கவுரிவாக்கம், சென்னை 73, விலை 40ரூ.
திரைப்படங்களில் காலத்தால் அழியாத பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ரசிகர்களின் காதுமடல்களில் இன்றளவும் வீற்றிருக்கும் பல மகத்தான பாடல்கள் உண்டு. தேசம், அரசியல், தொழிலாளர் நலன், தத்துவம், சமூகம், காதல், குழந்தைகள், சிறுவர், இயற்கை, கதை, நகைச்சுவை, பல்சுவை என்று ஒவ்வொன்றிலும் கவிஞரின் கருத்தாளமிக்க சொற்கள் படிக்கப்படிக்க பரவசப்படுத்துகின்றன. – ஸ்ரீநிவாஸ்.
—-
சுந்தரர் தேவாரம்(மூலமும் உரையும்), புலவர் சீ. சிவஞானம், விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை 641001, பக்கங்கள் 664, விலை 350ரூ.
ஆண்டவனையே தோழனாகக் கொண்டு 1200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருளாளர் சுந்தர மூர்த்தி நாயனார். இவர் முதன் முறையாக அடியார்களின் வரலாற்றை ஆவணப்பாடலாக திருத்தொண்டத்தொகை என்று பாடியவர். 63 நாயன்மார்களை இன்று நாம் அறிந்து வழிப்படத் தெரிந்துகொள்ள வேண்டியவர் சுந்தரர். அவரைப்பற்றி இந்த நூல் சுந்தரர் தேவாரம் என்ற பெயரில் மிக விளக்கமாக வெளிவந்ததுள்ளது. சிவனுடைய தோழனாக இருந்த சுந்தரர் 84 ஆலயங்களைத் தேடிச் சென்று தரிசித்து அருள்பெற்றுப் பாடிய 1026 பாடல்களும் விளக்கமாக, கருத்துடன் தரப்பட்டுள்ளன. ஏழாம் திருமுறை எனப்போற்றப்படும் இந்த நூல் அவரது வரலாற்று முறையில் தொகுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். சுந்தரர் சிவன் அடியார்கள் சூழ கோவில் தோறும் சென்று பாடியதும், அங்கு சிவன் நிகழ்த்திய அதி அற்புதச் செயல்களும் படிப்போரை வியப்பில் ஆழ்த்தும். பதிக வரலாறு, தல வரலாறு, பண், பதம்பிரித்த பாடல், அருஞ்சொற்பொருள், பாடல் பொழிப்புரை என்று விரிவான வகையில், படிப்பவருக்கும், பாடுபவருக்கும் இந்த ஏழாம் திருமுறை சுந்தரர் தேவாரம் உதவும். பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பணி களை வாய் என்று சுந்தரர் தேவாரத்தில் பாடுகிறார். சிவனைப் பாடினால் சோறு கிடைக்கும். நோய்கள் விலகும் என்பதற்குச் சான்றாக அவரது பதிகங்களே இந்தப் பெருநூலில் சான்று கூறுகின்றன. திருவஞ்சைக் களத்தில் இருந்து வெள்ளையானையில் சுந்தரரும், வெண்குதிரையில் சேரமான் பெருமானும் திருக்கயிலாயம் சேரும் 100வது பதிகம் வரை, புனிதப்பயணமாக இந்த நூல் நமக்கு வழிகாட்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல் தேவாரத்தேன் மழையில் நம்மை நனைக்கும் ஏழாம் திருமுறை ஆகும். – முனைவர் மா.கி. இரமணன். நன்றி: தினமலர் 22 ஜனவரி 2012.1