மரத்தின் அழைப்பு

மரத்தின் அழைப்பு, மலையாள சிறார் கதைகள், தமிழில்-யூமா வாசுகி, பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 90ரூ.

நகர்மயமாதலின் மௌனமான விளைவுகளில் ஒன்று குழந்தைப்பருவம் இழக்கும் உலகம். பெரும்பாலான முந்தைய தலைமுறை கிராமங்களில் வசித்தது. காடுகரைகள் எல்லாம் ஓடித்திரிந்து சிறுவர்கள் மாலைதான் வீட்டுக்கு வருவார்கள். சாப்பாட்டுக்குப் பையனைத் தேடி தாய்மார்கள் தெருக்களில் அலைவார்கள். கிளி பிடித்து, பொன்வண்டு தேடி, தேனடை தேடி, மீன்களைத் துழாவி அலைந்த அந்த சிறுவர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்? முந்தைய தலைமுறை அனுபவித்த கட்டற்ற இயற்கையோடு இயைந்த குழந்தைப் பருவம் இன்று கான்கிரீட் காடுகளில் வரவேற்பறையில் தொலைக்காட்சி முன்னால் முடிவடைந்துவிடுகிறது. வீட்டுத் திண்ணைகளில் உட்கார வைத்து இரவு சூழச்சூழக் கதை சொன்ன பாட்டிமார்களும், அத்தைமார்களும் இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குள் ஒர் அங்கமாகிப் போனார்கள். பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் எழுத்தாளர் யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் வெளியாகி இருக்கும் மரத்தின் அழைப்பு என்ற மலையாள சிறார் கதைகள் தொகுப்பை வாசித்தபோது மறக்க முடியாமல் மூளைக்குள் சிக்கிக் கிடக்கும் என் பால்யகால நினைவுகள் வந்து போயின. இத்தொகுப்பின் கதைகள் குழந்தைகளுக்கானவை. ஆனால் அவை பெரியவர்களுக்காகவும் அமைந்தவை. இதில் 50 குட்டிக்கதைகள் உள்ளன. பின்னட்டையில் படிக்கத் தவறாதே தங்கமே இந்த கதைகள் உனக்கு மனிதநேயத்தை தேனில் குழைத்துப் புகட்டும் என்ற வாசகங்கள் உள்ளன. இக்காலத்துக்குத் தேவையானது மனித நேயமே. தமிழில் சிறார்களுக்கான தரமான கதைகள் தற்போதைய காலத்துக்கு ஏற்ப எழுதப்பட்டிருக்கவில்லை.அதை ஈடுசெய்யும் முயற்சியில் பெரிதாக யாரும் ஈடுபடவும் இல்லை. பலாமரத்தின் துயரம் என்ற முதல் கதையில் ஒரு பலாமரம் மனிதர்களை எப்படி நேசித்துப் பழங்களை மேலும் மேலும் அதிகமாகப் பழுத்தது என்பதைச் சொல்கிறது. ஆனால் தாத்தாவின் காலம் போய் பேரனின் காலம் வருகையில் அம்மரத்தைப் பற்றிக் கவலைப்படவோ அதன் பழங்களை உண்ணவோ யாருக்கும் அக்கறை இல்லை. ஆகவே அது வெறுத்துப்போய் காய்ப்பை நிறுத்திவிடுகிறது. பேரன் காய்ப்பதில்லையே என்று வெட்டிவிடுகிறான். நானும் என் பழங்களும் தேவைப்படாத நீங்களும் எனக்கு வேண்டாம் என்றவாறே அது வீழ்ந்தது என அக்கதை முடிகிறது. ஒரு விதத்தில் இது இயற்கையைக் குறிக்கும் கதை. அதே சமயம் மனிதர்களையும் குறிக்கிறது. வீட்டில் கவனிப்பின்றி விடப்பட்டிருக்கும் முதியவர்களை இம்மரத்தில் வரும் பலாமரமாகக் கொள்ளலாம். குழந்தைக் கதைகள் அவர்களுக்கு அன்பு, கருணை, நட்பு ஆகியவற்றை வளர்ப்பதுடன் கொஞ்சம் உலகையும் கற்றுக் கொள்ள வைக்க வேண்டும். இத்தொகுப்பில் இருக்கும் பல கதைகள் பூனையும் புலியும் ஒரே இனம், மனிதன் குரங்கில் இருந்து வந்தவன், வண்ணத்துப் பூச்சிக்கும் பட்டுப்பூச்சிக்கும் உள்ள வித்தியாசம் என பல விஷயங்களும் சொல்லப்படுகின்றன. ஒரு பள்ளிக்கூடம், அதில் தன்னிடம் வம்பு செய்யும் பையனை அடிக்கிறாள் ஒரு பெண். ஆம்பிளைப் பையனை எப்படி அடிக்கலாம் என்று அந்த பெண்ணுக்கு மட்டும் வாத்தியார் தண்டனை கொடுக்கிறார். வீட்டுக்கு வந்து உன்னைப் பற்றி புகார் சொல்வேன் என்று அந்த வாத்தியார் சொன்னதால், அப்பெண் வீட்டில் உள்ள மரமொன்றில் ஏறி அமர்ந்துகொள்கிறாள். இதை சிறார் கதை என்று எளிமையாகச் சொன்னாலும் அப்படி தாண்டிச் செல்ல முடியவில்லை. காலம் காலமாக ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்றிருப்பதை கேள்வி கேட்கிறது ஒரு சிறார்கதை. வெறும் பூதமும் அரக்கனுமாக இருந்த சிறுவர்கள் கதை உலகம் காலத்துக்கு ஏற்ப மாறவேண்டியதற்கு உதாரணமாக இக்கதையைக் குறிப்பிடலாம். ஒரு முயல் சிங்கத்தைக் கூட்டிக்கொண்டுபோய் ஒரு கிணற்றில் தெரியும் சிங்கத்தின் நிழலைக் காட்டி அதற்குள் சண்டைபோடுவதற்காக ஏமாற்றி விழச்செய்யும் கதையைப் படித்திருக்கிறோம். அக்கதையை இந்த தொகுப்பில் சற்று மாறுதலாக படிக்கமுடிகிறது. அது பெண் சிங்கம். தண்ணீரில் தெரியும் பிம்பத்தைப் பார்த்து தலையை வாரிக்கொள்கிறது. முயல் தன் குட்டு உடைந்துவிட்டதே என்று அழ ஆரம்பிக்கும்போது சத்தம் போடாதே என் குட்டிகள் தூங்கிக்கொண்டிருக்கின்றன என்று காண்பித்து தொந்தரவு செய்யாதே என்கிறது. முயல் அவமானத்தில் வெட்கி ஓட முயல, மெதுவாகப் போ என்கிறது சிங்கம். இதுபோலவே வேறு சில கதைகளும் இதில் இருக்கின்றன. அன்பும் நட்பும் இயற்கையும் தோய்ந்த கதைகள். யூமாவாசுகி மிக எளிமையாக அழகாக மொழிபெயர்த்துச் செல்கிறார். முன்பே சொன்னதுபோல் இவை சிறார்கதைகள் மட்டும் அல்ல. -மதிமலர். நன்றி: அந்திமழை, 1/12/12.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *