மீஸான் கற்களின் காவல்
மீஸான் கற்களின் காவல், பீ.கே. பாறக்கடவு, தமிழில்-தோப்பில் முஹம்மதுமீரான், அடையாளம், 1205/1, கரூப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, பக். 60, விலை 50ரூ.
கேரளத்தின் பிரபல எழுத்தாளரான பீ.கே. பாறக்கடவு எழுதிய மீஸான் கற்களின் காவல் என்ற இச்சிறிய நாவல் உலகிலேயே மிகச் சிறிய நாவலெனப் புகழ்பெற்றது. இதுதான் இவரது முதல் நாவலாகும். கடந்த கால கதைகளை இக்கதையின் நாயகன் சுல்தான், நாயகி ஷஹன் ஸாதாவுக்குக் கூறுவதாக அமைந்திருக்கிறது இந்நாவல். ஊரில் வெள்ளம் வந்தபோது பள்ளிவாசல் காஸியார் போடும் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வெள்ளம் வடிவது, பைத்தியக்காரி உம்மாச்சோம் நகைகளைக் கழற்றிப் போட்டு கிணற்றில் குதிப்பது, அஸிஸ் அதிகாரி பல்லக்கில் பயணம் செய்வது, ஆலி முஸ்லியார் குதிரை மீது சவாரி செய்வது எனத் தனித்தனியான அத்தியாயங்களாகக் கதைகள் போகின்றன. தனித்தனிக் கதை மாந்தர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கூறுவதாக இந்நாவல் அமைந்துள்ளது. ஒரு நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு அதே காலத்தில் வெளியான கதைப் புத்தகங்களை வாசித்தால் போதும் என சுல்தான் கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது. இவருடைய படைப்புகள் கதையா? கட்டுரையா? என்று யூகிக்க முடியாத ஒன்று. மிகச் சிறிய அத்தியாயங்களாகப் பிரித்து ரத்தினச் சுருக்கமாக சொல்ல வந்ததைக் கூர்மையாகச் சொல்லியிருக்கிறார் பாறக்கடவு. இதைப் படித்தால்தான் தெரியும் மற்ற கதைகளுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் இருப்பது. நன்றி: தினமணி, 7/7/13.
—-
ஆரோக்கிய வாழ்விற்கு யோக முத்திரைகள், கீர்த்தி, அழகு பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 45ரூ.
இந்நூல் மூலம் நோய்களுக்கு மருத்துவம் மட்டுமே தீர்வு ஆகாது என்பதையும் தவறான சுவாச முறைகளும், உணவு பழக்கமுமே நோய்களுக்கு காரணம் என்பதையும் அறிய முடிகிறது. மனிதனின் உடல் பஞ்சபூதங்களுக்கு தொடர்புடையது என்பதும் விளக்கப்பட்டுள்ளது. 58 யோக முத்திரைகளும், அவற்றை செய்யும் முறையும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/4/13.
—-
ஓர் ஊதாங்குழல் தமிழ் ஊதுகிறது, ஞா. சிவகாமி, மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ.
கருத்துள்ள புதுக்கவிதைகள் கொண்ட நூல், நூலாசிரியர் ஞா. சிவகாமி, அரசு உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். மாதிரிக்கு ஒரு கவிதை தொட்டிலில் கிடக்க வேண்டிய குழந்தை குப்பைத் தொட்யில் பெண் குழந்தை என்பதால் அதை மண் குழந்தை என நினைத்தாளோ, அந்தத்தாய் சீச்சீ அவள் ஒரு பேய்! நன்றி: தினத்தந்தி, 24/4/13.