மூன்றாம் பாலின் முகம்
மூன்றாம் பாலின் முகம், பிரியா பாபு, சந்தியா பதிப்பகம், நியூடெக் வைபவ், 57-53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை 600083, பக்கங்கள் 108, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-164-4.html
அரவாணி எழுதிய முதல் தமிழ்நூல் என்ற சிறப்பை பெற்றுள்ளது ப்ரியா பாபு எழுதியுள்ள மூன்றாம் பாலின் முகம் என்ற நூல். இந்த நாவலின் மையக் கதாபாத்திரங்கள் ரமேஷ் என்ற இளைஞன் (பின்னர் பாரதி என்ற பெண்ணாக உருவெடுக்கிறாள்). அவனது தாய் பார்வதி, சமூக சேவகி கண்மணி ஆகிய மூவர் மூலம் அரவாணிகள் சந்திக்கும் பிரச்சனைகளை அழகாக எழுதியுள்ளார் ப்ரியா. கணவனின் கோபத்திலிருந்து மகனை காப்பாற்ற முயலும் பார்வதி, மகனின் உணர்வுகளை புரிந்து கொள்ள பெரும் முயற்சி செய்கிறார். ரமேஷ் அரவாணிகளை சந்தித்து உரையாடுவதன் மூலம் அரவாணியாக மாறுவதில் உள்ள சிக்கல்களை ப்ரியா நன்கு வெளிப்படுத்தியுள்ளார். அரவாணியாக மாறுவதற்கு முன்பு மூத்த அரவாணிகள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நன்கு எடுத்துக் கூறுகின்றனர். அறிவுரை வழங்குகின்றனர். ரமேஷ் மூலம் கூவாகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா பற்றிய ப்ரியாவின் பதிவுகள் அவர்களின் சடங்குகள் பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறது. விழா முடிகையில் தாலியறுப்பவர் வைக்கும் ஓப்பாரி அரவாணிகளின் நிலையை கண்முன் நிறுத்துகிறது.(பக்கம் 81). கதையின் இறுதியில் ரமேஷின் தாயும் மூத்த அரவாணியும் சந்தித்து உரையாடுவதும் இறுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ரமேஷ், பாரதியாக மாறுவதும் பெண்ணாக மாறிய பின்னர் தனது தாயை ரமேஷ் (பாரதி) சந்திப்பதும், உணர்ச்சி ததும்ப எழுதப்பட்டுள்ளது. ஆனால் பாரதியின் தந்தை அவளை வீட்டை விட்டு துரத்த தாய் பார்வதி கதற பாரதி தனது தாயிடம் பேசிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறுவதுடன் கதை நிறைவேறுகிறது. பார்வதி சிறந்த அம்மாவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். தாய்மகன் பாசம் பல இடங்களில் அழகாய் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரவாணியின் பேனா எழுதிய முதல் நாவல் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ப்ரியா பாபு தனது முதல் நாவலிலேயே ஒரு நல்ல படைப்பாளி என்ற மதிப்பை பெற்றுவிட்டார். – பேரா. ஆர். சந்திரா.