மொழிப்போர்
மொழிப்போர், ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ.
நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும் பல்வேறு கால கட்டங்களில் தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இதை எதிர்த்து 1938ம் ஆண்டு முதல் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் நடத்திய மொழிப்போர், மற்றுமொரு சுதந்திர போராட்டமாக கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/10/2013.
—-
அவன் ஆனது, சா. கந்தசாமி, நற்றிணை பதிப்பகம், சென்னை 5, பக். 224, விலை 170ரூ.
முப்பதாண்டுகளுக்கு முன்பு வெளியான அவன் ஆனது நாவல் இப்போது மகத்தான நாவல் வரிசையில் மீண்டும் வெளியாகியிருக்கிறது. நாவலாசிரியர் சா. கந்தசாமி 1960களில் நவீன தமிழ் இலக்கியத்தில் தோன்றிய எழுச்சிக்கு பங்களித்தவர்களில் ஒருவர். சிறுகதைகள் மூலம் அறியப்பட்டிருந்த சா. கந்தசாமியில் முதல் நாவலான சாயாவனம், கதையிலும் களத்திலும் முற்றிலும் வேறுபட்டு நாவல் என்ற வடிவத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது. தொடர்ந்து பண்பட்டு வந்துள்ள அவரது எழுத்து, அவன் ஆனதுவில் மிகப் புதுமையான கதை மாந்தர்களையும் கதைக் களனையும் தமிழ் வாசகன் முன்னே விரிக்கிறது. சிவா என்பவனின் பார்வையிலும் சிந்தனையிலும் கூறப்படும் கதையின் காட்சிகள் என்றாலும் இது முற்றிலும் நனவோடை உத்தியில் எழுதப்பட்ட கதையில்லை. எல்லா பாத்திரங்களின் எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றின் மூலமாகவும் வாழ்க்கையின் ஜன்னல்களைத் திறந்து கொண்டே போகிறார் நாவலாசிரியர். உறவுகளின் ஏற்ற இறக்கங்கள் அநாயாசமாக நம் முன் கடந்து செல்கின்றன. கதை வெளிவந்த காலம் என்ற சட்டகத்துக்குள் கட்டுப்பட்டுவிடாமல் எக்காலமும் புதுமை மாறாமல் இருப்பதை நல்ல இலக்கியத்தின் ஓர் அளவுகோலாக கொள்ளலாம். இந்த நாவல் அந்த ரகத்தைச் சேர்ந்தது. நன்றி: தினமணி, 6/10/13.