வனமிழந்த கதை
வனமிழந்த கதை, கே. ஸ்டாலின், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, பக். 87, விலை 70ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-425-9.html உணர்ச்சிகளில் இருந்து தப்பிச்செல்ல முயலும் ஒவ்வொரு கவிஞனும், உணர்ச்சிகளில் இருந்துதான் தன் கவிதையைத் தொடங்கியாக வேண்டும். இப்படியான ஒரு அனுபவத்தையே கே. ஸ்டாலின் இக்கவிதைகள் உணர்த்துகின்றன. கவித்துவமும் மனிதத் தன்மையும் ஒருவகையில் உணர்ச்சிகளின் தூண்டுதலில் இருந்தே அடையாளம் காணப்படுகின்றன. திருவிழாவின் குப்பைகளைக் கிளறிக்கொண்டிருக்கும் பைத்தியமொன்றின் கைகளில் கிடைக்கக்கூடும் யாரோ யாருக்கோ அன்பொழுகத் தந்து தவறிப்போன சிறுபரிசொன்று என்ற கவிஞரின் வரிகளில் தவறிப்போனதில் உள்ள உணர்ச்சியை கவிஞனால் மட்டுமே உணரமுடியும். வாழ்வின் பல படிமக்காட்சிகள் நம் கண்முன் உணர்ச்சிகளாய் காட்சிப்படுத்தப்படும் இடங்கள் இத்தொகுப்பில் ஏராளம். இவை யாவும் தவிர்க்கவியலா விபத்துக்களே. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 19/1/2015.
—-
ஒரு விடியலும் சில பறவைகள், ஸ்ம்ரித்திராம், சிவாலயம் வெளியீடு, பக். 192, விலை 160ரூ.
கிராமிய மணம் கமழும் நாவல்கள் அதிகம் வரும் காலம் இது. என்றாலும் இது கிராமங்களின் அவலங்களைச் சீர்படுத்த முயற்சிக்கும் நாவல். ஒரு கிராமம் எப்படி இருக்கும், அங்குள்ள மக்களின் இன்றைய நிலை என்ன, அதன் பண்பாடு, கட்டுப்பாடு, பழக்க வழக்கம் என்று கிராமங்களின் இயல்பை நம்முன் காட்டி விடுகிறார் ஆசிரியர். அறிவழகு, துர்கா, காத்தவராயன், கனகா, கஞ்சசாமி, பெரியசாமி, காந்தாரியம்மாள், மன்னாரு போன்ற பாத்திரங்கள் நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களே என்றாலும் நாவலில் படிக்கும்போது நம் நெஞ்சைவிட்டு அகலாத மனிதர்களாக நம் மனதில் பதிவாகிப் போகிறவர்கள். கருத்துள்ள கிராமிய மணம் வீசும் நாவல். நன்றி: குமுதம், 26/1/2015.