வாரம் ஒரு பாசுரம்
வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், 57, பிஎம்ஜி காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-960-6.html
ஆழ்வார்கள் பாசுரங்களை அணுகுவது எப்படி? அணுஅணுவாய் சுவைப்பதெப்படி? என்ற முன்னுரையுடன் திகழும். இந்தப் புத்தகம் பிரபந்தப் பாசுரங்களின் விளக்கங்களைத் தாங்கியுள்ளது. அம்பலம் இணைய இதழ், கல்கி வார இதழ்களில் சுஜாதா எழுதிய வாரம் ஒரு பாசுரம் என்ற தொடரின் தொகுப்பு இந்த நூல். திவ்யப் பிரபந்தத்தில் இருந்து எளிய பாசுரங்களை விருப்பப்படி தேர்ந்தெடுத்து, விளக்கம் தந்துள்ளார். வழக்கத்தில் இல்லாத அரிய சொற்களையும் இதில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த நூலில் பின்னிணைப்பாக அருஞ்சொற்களுக்கு பொருள் விளக்கம் தந்துள்ளார். 68 பாசுரங்களுக்கான விளக்கம் இதில் உள்ளது. பிரபந்தம் முழுவதற்கும் அர்த்தம் சொன்னால் ஆயாசம் ஏற்பட்டுவிடும். மாறாக, சில பாசுரங்களை அடையாளம் காட்டும்போது மற்ற பாடல்களைத் தேட ஆர்வம் ஏற்படும் என்கிறார் சுஜாதா. பாசுரம், அதற்கான முன்னுரை, அந்தப் பாசுரத்தின் பின்னணி என சுவைபட விளக்கம் அளித்துள்ளார். சில பாசுரங்களில் காணும் சொற்றொடர்களுக்கு திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கிய சொற்றொடர்களையும் ஒப்புமை காட்டியுள்ளார். ஆன்மிகத் தமிழை சுவைக்க விரும்புபவர்களுக்கு நல்விருந்து இந்த நூல். நன்றி: தினமணி, 23/9/2013.
—-
தமிழ் பண்பாட்டில் பவுத்தம், தொகுப்பு-பிக்கு போதிபாலா, பேராசிரியர் க. ஜெயபாலன், உபாசகர் இ. அன்பன், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-2.html
சென்னையில் நடந்த தமிழ்ப் பண்பாட்டில் பவுத்தம் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட 42 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பவுத்த ஆய்வு எழுச்சியில் ஆக்கத்தோடு பணியாற்றி வரும் பல்வேறு ஆய்வாளர்கள் தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்திய விதம் பவுத்த பேரெழுச்சியைக் கொண்டு வருவதை இந்த நூல் வலியுறுத்துகிறது. உலகத்திற்கே பவுத்தத்தைப் போதித்தவர்கள் தமிழர்களே, என்பதையும் இந்த நூல் உணர்த்துகிறது. இந்திய வரலாற்றையும், தமிழக வரலாற்றையும் முழுமையாக தெரிந்து கொள்ள பெரிதும் இந்த நூல் உதவும்வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் படித்து பயன்பெறக்கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 25/9/2013
