வியாச பாரதம்
வியாச பாரதம், வர்த்தமானன் பதிப்பகம், பக். 2000, விலை 700ரூ.
வேதங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் இதில் இடம் பெறுவதால் வியாசபாரதத்தை ஐந்தாம் வேதம் என்பர். நூற்றுக்கணக்கான மாந்தர்கள் உலாவரும் ஸ்வர்ண மாளிகை, வியாசபாரதம். ஏராளமான கிளைக்கதைகளையுடைய ஓர் ஆலவிருட்சம், வியாச பாரதம். நளதமயந்தி வரலாறு, சத்தியவான் சாவித்திரி வரலாறு, இராமன் வரலாறு, துஷ்யந்தன் சகுந்தலை வரலாறு போன்றவை புகழ் வாய்ந்தவை. அரிச்சந்திரன், குசேலன், கந்த பெருமான், பரசுராமர் போன்றோர் வரலாறும் இதில் இடம் பெற்றுள்ளன. மனித வாழ்க்கையை நெறிப்படுத்த எழுந்த இந்நூல், அறவழியில் நடக்க மனிதனைச் சிந்திக்க வைக்கிறது. இன்பமும் துன்பமும் மூடரைத்தான் பற்றும். அறிவாளிகளை அவை நெருங்கா. பயன்களைப் பாராது கடமையைச் செய்ய வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை உலகுக்குப் பறை சாற்றுவது பாரதம். இந்நூலைப் படிப்பவர் நெஞ்சில் ஓர் அமைதி ஏற்படும். உலோபம், பொறாமை, கோபம் போன்ற தீக்குணங்கள் நீங்கும். தியானம், அமைதி, அன்பு போன்ற நற்குணங்கள் துலங்கும். நன்றி: கல்கி, 8/6/2014.
—-
நீதிமொழிகள், கவிஞர் ச.தோ. அந்ததோணிசாமி தமிழ்மாறன், மணிமேகலை பிரசுரம், சென்னை, விலை 75ரூ.
பரிசுத்த வேதாகமத்தின் நூல் ஒன்றினை நூலாசிரியர் ஒரு அழகிய கவிதையாக வடித்துள்ளார். சாலமோனின் நீதிமொழிகள் கிறிஸ்தவ மத்தினருக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டிய பொதுவான அறிவுரைகளாகும். நன்றி: தினத்தந்தி, 2/7/2014.