விவேக சிந்தாமணி
விவேக சிந்தாமணி, கவிஞர் பத்ம தேவன், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி. நகர், சென்னை 17, பக். 200, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-878-8.html
தனிப்பாடல்கள் பலவற்றைத் தொகுத்து, விவேக சிந்தாமணி என்ற பெயரில் நூலாக முதலில் வெளியிட்டவர் யார் என அறிய இயலவில்லை. முற்காலத்தில், பெரியோர்கள் அனைவரும் படித்து பாதுகாத்த நூல். இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களும், நீதிக் கருத்துக்களை கூறும் பாடல்களும் உள்ளன. புராணச் செய்திகளும் பஞ்சதந்திரக் கதைச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. காமுகர்கள், விலைமாதர்கள் பற்றிக் கூறப்பெற்றுள்ள கருத்துக்கள் இக்காலத்திற்கு ஒவ்வாதவை. வேம்புக்கு தேன் வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறாது, இலவு காத்த மதியிலாக்கிள்ளை போன்ற உவமைகள் நூலின் தரத்தை உயர்த்துகின்றன. அவ்வையார், ராமசந்திர கவிராயர் போன்றோரின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆயினும் அவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. விண்ணுலகத் தலைநகரம் அமராவதியில் உள்ள சிந்தாமணி, அதனெதிரில் சென்று சிந்தையில் நினைப்பவற்றையெல்லாம் கொடுத்துதவும் மணி என்பர். அதைப்போல மக்களின் மனத்தினில் தோன்றும் எல்லாவற்றையும் பற்றி விவேகமான கருத்தக்களைக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. ஆசிரியர் யாரெனத் தெரியாத இந்த நூலுக்கு உரையாசிரியர் தெளிவாக உரை எழுதி, தேவையான இடங்களில் விளக்கமும் அளித்துள்ள முறை பாராட்டும் வகையில் உள்ளது. படித்து மகிழலாம். -பேராசிரியர் ம.நா.சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 9/10/2011.
—-
கசடறக் கற்க கற்பிக்க, புலவர் மு. கனகலட்சுமி, சிவசக்தி பதிப்பகம், 23, வள்ளல் பாரி நகர், முகப்பேர், சென்னை 50, விலை 100ரூ.
தாய்மொழியாம், தமிழ்மொழியை படிக்கத் தொடங்கும் மழலைகளுக்கு மட்டுமல்லாது. வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், ஏன் வெளிநாட்டினர் உள்பட இதுவரை தமிழே தெரியாதவர்கள்கூட, நாற்பத்து ஒரு நாட்களில் மிகச் சீரிய தமிழ் புலமையை பெற்றுவிடும் வகையில் பயிற்சி அளிக்கும் ஒரு அருமையான நூலை எழுதியுள்ளார் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் புலவர் மு. கனகலட்சுமி. இதுவரை தமிழைக் கற்றுக்கொள்ள எத்தனையோ நூல்கள் வெளிவந்து இருந்தாலும், ஒரு வித்தியாசமான கோணத்தில் நூலாசிரியரே பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு எபதி இருக்கிறார். புதிதாக தமிழ் படிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், அன்றாடம் பயன்படுத்தப்படும் பல வார்த்தைகள் எது தவறு? எது சரி என்ற வகையில் எல்லோருக்கும் புரிய வைக்கும் அபூர்வமான நூல் இது. நன்றி: தினத்தந்தி, 8/2/2012.