வீணையின் குரல்
வீணையின் குரல் (எஸ். பாலசந்தர்-ஓர் வாழ்க்கைச் சரிதம்), விக்ரம் சம்பத், தமிழில்-வீயெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில் 629001, பக். 600, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html
இந்தியாவின் மரபு மாறாத வீணை இசையை உலகெங்கும் முழக்கி வெற்றி வாகை சூடிய வீணை மேதை எஸ். பாலசந்தரின் வரலாற்று சுவடுகளை, ஒரு திரைப்படம் போல விக்ரம் சம்பத் இந்த நூலில் பதிவு செய்துள்ளார். பிறவிக் கலைமேதை பாலசந்தரின் சினிமா சாதனைகள், சங்கீத சாதனைகள், தனிமனித போராட்டச் சாதனைகள் என்று முப்பரிமாணங்களை இந்த நூலில் பார்த்து பரவசப்பட்டு பிரமித்துவிட முடியும். பள்ளிப்படிப்பு முடிக்காது நின்று விட்ட இந்த படிக்காத கலை மேதை, ஆங்கிலத்தையும் கற்று, ஆங்கிலப் படங்களுக்கு நிகரான திகில் படங்களையும், மர்மப் படங்களையும், இசைக்கும், நடிப்புக்கும் முன்னோடியாக நின்று, இயக்கி, பிரமிக்க வைத்துள்ளார். யாரிடமும் குருவாகச் சென்று கற்றுக்கொள்ளாத சுயம்பு மேதை. இவரது தனித்தன்மையான வீணை வாசிப்புக்கு, உலகமே தலை வணங்கியது. பத்மபூஷன் விருதும், சங்கீத நாடக அகடமி விருதும், அமெரிக்க நாட்டின் விருதும் என்று உலகெங்கும் முதன்முதலாக இவரது வீணையின் குரலுக்கு விருது மழைகள் பொழிந்தன. தன் மனதுக்கு சரி என்ற பட்டதை இசையில் துணிவுடன் எடுத்துக் கூறும் பாலசந்தர், சங்கீத உலகில் புதுப்புது யுத்தங்களை நடத்தி, அதில் வெற்றி வாகை சூடினாலும், துணிவுடன் உண்மைக்காக தனி மனிதனாகப் போராடிப் போராடி, உடல் நலம் கெட்டு, மதிப்பை இழந்து, மரணத்தையும் சந்தித்த வரலாறு, படிப்பவர் மனதில் முகாரி பாடி அழ வைக்கிறது. சரஸ்வதி கையில் உள்ள வீணை கருவிக்கு, தன் வாழ்வால் புதுப்புது வரலாறு படைத்த பிறவி மேதையின் அருமை வாழ்வுச் சித்திர நூல். -முனைவர் மா.கி.ரமணன். நன்றி: தினமலர், 26/5/2013.
—-
நினைவுகளின் நகரம், ராஜா சந்திரசேகர், நதி பதிப்பகம், சி8, மூன்றாவது தளம், சரயூ பிளாட்ஸ் விஜய் 70/2, ஸ்ரீராமர் தெரு, சாலிகிராமம், சென்னை 93, விலை 100ரூ.
புன்னகைக்கச் சொல்லி எடுத்தவரின் புன்னகையும் இருக்கிறது புகைப்படத்தில் -இதுபோன்ற 194 இனிமையான கவிதைகளால் நிரம்பியிருக்கிறது ராஜா சந்திரசேகரின் நினைவுகளின் நகரம். இது இவரது ஐந்தாவது கவிதைத் தொகுப்பு. நன்றி: அந்திமழை, 1/1/2013.
