ஸ்ரீ வைஷ்ணவம்

ஸ்ரீ வைஷ்ணவம், வேணு சீனுவாசன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-425-0.html

திருமண் காப்பிடுவதற்கு விரல்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமாம். அதிலும்கூட நடுவிரலையும் நகத்தையும் பயன்படுத்தக் கூடாதாம். ஸ்ரீசூர்ணத்தைச் சுமங்கலிப்பெண்கள், கன்னிப்பெண்கள், கைம்பெண்கள் ஆகியோரும் தரித்துக் கொள்ள வேண்டும். கன்னிப் பெண்கள் பூசணி விதை வடிவிலும், சுமங்கலிப்பெண்கள் மூங்கில் இலையைப் போலவும், கைம்பெண்கள் எள்ளின் வடிவத்திலும் ஸ்ரீ சூர்ணம் தரிக்க வேண்டுமாம். கருவுற்ற பெண்ணுக்கு சீமந்தம் என்று ஒரு சடங்கு நடத்துவதுண்டு. சீமந்தம் என்றால் தலையின் வகிட்டுப் பகுதி. அதில் முள்ளம்பன்றியின் முள்ளால் தலையில் குத்தாமல் வகிடு எடுக்கும் நிகழ்வு உண்டு. பெண்ணின் கருவில் உள்ள குழந்தை அந்த முள்ளைப்போல சேதமடையாமல் வலிமையோடு பிறக்க வேண்டும் என்பதற்காக ஏற்பட்டது இது. பூணூல் அணிவிக்கும் வைபவத்தின்போது குழந்தைக்குப் புத்தாடை அணிவித்து அது விழாமல் இருப்பதற்காக முஞ்சம் புல்லால் மூன்று வடமாகச் செய்யப்பட்ட மேகலையைக் கட்டுவார்கள். வேத பாடங்களை முறையாகக் கற்ற நாட்களில் சிலர் அந்தக் குழந்தைகளைத் திட்டக்கூடும். அந்த வசைமொழிகளிலிருந்து குழந்தைகளைக் காத்து பலம் தர வேண்டும் என்பதற்காக ரட்சையாகக் கட்டப்படுவதாம் இது. பழைய நாட்களில் மார்கழி மாதம் எழுதுகிற கடிதங்களில் தேதியைக் குறிப்பிடாமல் அந்த நாளுக்குரிய திருப்பாவைப் பாடலின் முதல் வார்த்தையைக் குறிப்பிட்டு எழுதுவார்களாம். அதாவது மாயனை என்று ஐந்தாம் பாடலின் முதல் பதத்தைக் குறிப்பிட்டால் ஐந்தாம் தேதி எழுதியதாகப் பொருள். வைஷ்ணவ விளக்கம், தத்துவங்கள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் என்று நான்கு பகுதிகளாக வகுத்துக் கொண்டு வைணவ நெறி தொடர்பான ஏராளமான தகவல்களைத் தொகுத்துத் தருகிறார் வேணு சீனுவாசன்.  

—-

 

அடித்தள மக்கள் வரலாறு, ஆ. சிவசுப்பிரமணியன், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ.

பரதவக் குலத் தலைவர்களும் வணிகர்களும் போர்ச்சுக்கீசியர்களுக்கு விருந்து தரும்போது மேஜையைப் பயன்படுத்தினார்களாம். அதனால் இந்தப் பரதவர்கள் மேஜைக்காரர்கள் ஆனார்கள். 1908 ஆம் ஆண்டிலேயே பனிமயமாதா தேர்த்திருவிழா நடைபெற்ற போது ஜாதிப் பிரச்னை வெடித்திருக்கிறது. மீண்டும் 1947 ஆம் ஆண்டில் வலுத்திருக்கிறது. பல்லக்கு ஏறிப் பவனி வருவது எல்லோராலும் முடியாது. கைவினைஞர் வகுப்பினர் பல்லக்கு ஏறுகிற உரிமையை மன்னர்களிடம் கேட்டுப் பெற்றார்களாம். ஆனாலும்கூட அவர்களால் அந்த உரிமையை நிறைவுடன் அனுபவிக்க முடியவில்லை. உயர்சாதியினர் எதிரே வந்தால் பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி மரியாதை செய்ய வேண்டுமாம். மதம் மாறினாலும் தீண்டாமை அவலம் நீங்கவில்லை என்பதை நெல்லை மாவட்ட முக்கூடல் கிராம நிகழ்ச்சிகள் விளக்குகின்றன. தீர்த்த யாத்திரை போய் வந்த தாழ்ந்த குலத்தவர் ஒருவர், தம் உறவினருக்கு விருந்து தந்தபோது நெய் பரிமாறப்பட்டதாம். அதனால் உயர் சாதியினர் வெகுண்டு எழுந்து விருந்தை நாசப்படுத்தினார்களாம். காரணம் தீண்டாதார் தங்கள் உணவில் நெய் சேர்த்துக்கொண்டது தங்களை அவமதித்ததாகும் என்று கருதினராம். ஜெய்ப்பூரில் நடந்தது இது. அடித்தள மக்களின் வரலாறு என்னும் நூலில் இதுபோன்ற பல குறிப்புகளை எழுதுகிறார் ஆ. சிவசுப்பிரமணியன். நன்றி: கல்கி 24/3/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *