சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல்

சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல், விமலாதித்த மாமல்லன், சத்ரபதி வெளியீடு, 5/6 சி பி டபிள்யு டி பழைய க்வாட்டர்ஸ், பெசன்ட் நகர், சென்னை 90, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-900-8.html

சமூக வலைத்தளங்கள் கடந்த சில ஆண்டுகளில் தமிழில் விவாதங்களின் மொழியை முற்றாக மாற்றியமைத்துவிட்டன. சீரான, தர்க்கப்பூர்வமான வாதமுறைகள் மறைந்து, குறுக்கு வெட்டாக பாய்ந்து செல்லும் வாத முறை இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. பாடகி சின்மயி ட்விட்டரில் தெரிவித்த சில கருத்துககள், அவர் மீது தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் எல்லாம், சில வாரங்கள் வெகுஜன ஊடகங்களுக்கு பெரும் தீனியாக மாறின. அந்த விவாதங்களைத் தீவிரமாக முன்னெடுத்தவர்களில் ஒருவர் விமலாதித்த மாமல்லன். இணைய ஆபாசம் என்ற எளிய புள்ளியில் தொடங்கி இந்த சர்ச்சை, தமிழ் தேசிய அரசியல், சாதிய அரசியல் என விரிவடைந்த விதத்தை இந்த நூல் சுவாரசியமாகத் தொகுக்கிறது. சமூக வலைத்தளத்தில் நடந்த ஒரு விவாதம் இவ்வாறு தொகுக்கப்படுவது இதுவே முதல் முறை என்ற வகையில் மாமல்லன் ஒரு முன்னோடியின் இடத்தைப் பெறுகிறார். விரைவில் இதுபோன்ற பல தொகுப்பு நூல்கள் வர வாய்ப்பிருக்கிறது. நன்றி: குங்குமம், 4 பிப்ரவரி 2013.  

—-

 

சர்க்கரை நோயும் அதை தீர்க்கும் முறையும், டாக்டர் பச்யைப்பன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி. நகர், சென்னை 17, விலை 55ரூ

உலகில் குறிப்பாக இந்தியா, சீனா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள பல நாடுகளிலும் வேகமாக அதிகரித்து வரும் நோயாக சர்க்கரை நோய் உள்ளது. இதற்கு முறையாக மருத்துவம் எடுக்காவிட்டால், உயிருக்கே ஆபத்து விளையக்கூடும். இத்தகைய நோய் குறித்து, அரசு ஆஸ்பத்திரியில் பல காலம் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இந்நூலாசிரியர் தரும் பல்வேறு தகவல்கள் பயனுள்ளவையாக உள்ளன. அதாவது நோயாளிகளின் மனநிலை எப்படி இருக்கும் என்ற அனுபவத்தின் அடிப்படையில் சர்க்கரை நோயைப் பற்றியும், அதனால் உருவாகும் தீங்குகளைத் தீர்க்கும் முறைகளைப் பற்றியும் எளிய முறையில் இந்நூலில் விரிவாகக் கூறியுள்ளார். சர்க்கரை நோய் என்றால் என்ன? அது உருவாக காரணம் என்ன? இதில் எத்தனை வகைகள் உள்ளன? இந்நோய் வராமல் தடுக்க வழிகள் என்ன? இந்நோய்க்கான அறிகுறிகள், இதற்கான பரிசோதனை முறைகள், வைத்திய முறைகள், உணவு முறைகள், பாதுகாப்பு முறைகள், சரியாகக் கவனிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்… என்று பல்வேறு தகவல்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளார். கூடுதலாக இறுதியில் 30 பக்கங்களுக்கு மேல் பற்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பற்றி விளக்கியுள்ளதும் சிறப்பாக உள்ளனது. – பரக்கத். நன்றி: துக்ளக், 16 ஜனவரி 2013.  

—-

அயோத்தி முதல் அம்பேத்கார் வரை, வ. பாரத்வாஜர், காவ்யா பதிப்பகம், 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, பக்கங்கள் 275, விலை 220ரூ.

சமூக பொருளாதார அரசியல் சிக்கல்கள் குறித்து நூலாசிரியர் கொண்டிருக்கும் கோட்பாடுதான் நூலின் மைய இழை, அரசு அமைப்பில் உள்ள கட்டுப்பாடுகள் மக்களை ஒடுக்குவதாகக் கூறி, அவற்றை நிராகரிக்கும் விதத்திலேயே கட்டுரைகள் பெரும்பாலும் அமைந்துள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் இந்திய சமூகமும் தமிழ்ச்சமூகமும் கண்டடைந்த பிரச்னைகள் ஏதோ ஒரு விதத்தில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன. அதில் மார்க்சியம், தலித்தியம், திராவிடம், காந்தியம், பெண்ணியம், இந்துத்துவம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், தத்துவம், அரசியல் என்று பட்டியல் நீளுகிறது. ஆசிரியரின் பின்னல் நடை, வாசிப்பின் வேகத்தை மந்தப்படுத்துகிறது. மற்றபடி, கட்டுரைகளின் பன்மைத்தன்மை செரிவுமிக்கவை. – இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 30 ஜனவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *