பள்ளு இலக்கியத் திரட்டு

பள்ளு இலக்கியத் திரட்டு, தே. ஞானசேகரன், சாகித்திய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புதுடில்லி 110001, பக். 192, விலை 110ரூ.

பிள்ளைக்கவி முதல் பெருங்காப்பியம் ஈறாகக் கூறப்படும் 96 பிரபந்தங்களுள் ஒன்ற பள்ளு இலக்கியம். நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது எனும் அளவுக்கு, உழவர்களின் பாடல்கள் ஏராளமாக உள்ளன. இந்நூலில் கடவுள் வணக்கம் மூத்த பள்ளிவரல் இப்படியாக பள்ளிகளுள் ஒருவருக்கொருவர் ஏசல் என 48 உறுப்புகள் 14 வகைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. 19 பள்ளு நூல்களில் இருந்து (முக்கூடற்பள்ளு, கஞ்சமி செட்டியார் பள்ளு, நரசிங்கப்பள்ளு, கதிரை மலைப் பள்ளு இப்படி) பல்வேறு வகையான பாடல்கள், இதில் திரட்டித் தரப்பட்டுள்ளன. பள்ளு இலக்கிய வகை பற்றி அறிந்து கொள்ள, இந்நூல் பெரிதும் உதவும். -பின்னலூரான் நன்றி: தினமலர். 14/7/13  

—-

 

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம், சீர்காழி ஸ்ரீ கண்ணுடைய வள்ளலார், சித்தர் மகரிஷி ஈஸ்வரப்பட்டா, தொகுப்புரை இராம.சிவசக்தி வேலன், நர்மதா பதிப்பகம், சென்னை 17, பக். 216, விலை 80ரூ.

சீர்காழி ஸ்ரீகண்ணுடைய வள்ளலார் இயற்றிய ஒழிவில் ஒடுக்கம் என்ற நூலை 1851ஆம் ஆண்டு முதன் முதலில் பதிப்பித்து, இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதி மூல நூலோடு திருப்போரூர சிதம்பர சுவாமிகளின் விளக்க உரையையும் இணைத்து வெளியிட்டுள்ளலார் வடலூர் வள்ளலார் சுவாமிகள். அதன் பிறகு முகவைக் கண்ண முருகனடிமையால் வேதாந்த அடிப்படையில் இதற்கு விளக்கவுரை எழுதப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்திருக்கும் இந்நூலுக்கு விளக்கவுரை எழுதியுள்ளவர் குழந்தைப் பருவத்திலேயே சிவனருள் பெற்ற சித்தர் ஈஸ்வர பட்டா. ஒழிவில் ஒடுக்கம் உலகப் பாசங்களிலிருந்து நீங்கி அருளில் அழுந்தித் தூய்மையடைவதற்குக் கருவியான ஒரு ஞானநூல். இதைத் திருஞானசம்பந்தர் உபதேசித்ததால் இதை சிறந்த சைவ சித்தாந்த ஞானநூல் என்றும் கூறுவர். ஆன்மாவுக்குத் தெளிவைக் கொடுத்து அறிவைப் பெறச் செய்வதே ஒழிவில் ஒடுக்கம். அதுவே நூல்களுக்கெல்லாம் முதல் நூல். ஒழிவில் ஒடுக்கம் என்பது பிறப்பெடுக்கும் ஆன்மாவைச் சூழ்ந்த தத்துவக் கருவிகள் ஒழியும்பொழுது ஞானம் ஏற்பட்டு முக்தியில் ஒடுங்குவது ஆகும் என விளக்கம் தருகிறார் உரையாசிரியர். சரியை, கிரியை, யோகத்தால் முக்தி தாமதமாகக் கிடைக்கக்கூடும். ஆனால் ஞானத்தின் மூலம் அதை விரைவாகப் பெறலாம் என்பதை ஆணித்தரமாக இதில் பதிவு செய்துள்ளார் கண்ணுடைய வள்ளலார். ஞானத்தின் மூலம் முக்தி பெற விரும்புவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஞான நூல். நன்றி: தினத்தந்தி, 15/7/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *