அயோத்தி முதல் அம்பேத்கார் வரை
அயோத்தி முதல் அம்பேத்கார் வரை, வ. பாரத்வாஜர், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, பக். 275, விலை 220ரூ.
துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர், கண்ணதாசன் பத்திரிகை முதல் ஆனந்த விகடன் வரை பல பத்திரிகைகளில் தனது படைப்புகளைப் பதிவு செய்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் சமூக, பொருளாதார, அரசியல் நிலை குறித்து இந்தியா சந்தித்த பல பிரச்னைகளை விமர்சனப் பார்வையுடன் இந்நூலில் எழுதியுள்ளார். குறிப்பாக, மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், காந்தியம், திராவிடம், ஹிந்துத்வா, மதச்சார்பின்மை, இந்திய ஜனநாயகம், தீண்டாமை போன்ற பல விஷயங்கள் இதில் அலசப்பட்டுள்ளன. சில சமயம் மார்க்ஸியக் கருத்துக்களுக்குச் சார்பாகவும்,சில சமயம் ஹிந்துத்வாவுக்குச் சார்பாகவும் இவரது கருத்துக்கள் தொனித்தாலும், இவர் இன்ன சார்புடையவர் என்று தீர்மானிக்க முடியாதபடியும் தெரிகிறார். இவரது மொழிநடை கடினமாக இருந்தாலும், எடுத்து வைக்கும் கருத்துக்கள் சிந்தனைகைளைத் தூண்டும்வகையில் உள்ளன. அயோத்தி முதல் அம்பேத்கார் வரை என்ற ஒரு ஆய்வுக் கட்டுரையில் (இதுவே இந்நூலின் தலைப்பாகவும் வந்துள்ளது). இந்திய அரசியல் எந்தெந்தக் காலகட்டத்தில் எந்தெந்த சமயத்தைச் சார்ந்து இருந்தது என்பதை அசோகர் காலத்திலிருந்து அலசுகிறார். 1947க்குப் பிறகு இந்தியா ஹிந்து சமயச் சார்பாக ஆனது இயல்பானதே என்றும், ஆனால் மதச்சார்பின்மை பேசும் அனைத்துக் கட்சிகளுமே மதச் சிறுபான்மையினரை ஏமாற்றும் கபடமான எண்ணம் கொண்டவையே என்றும் விமர்சிக்கிறார். அதற்கு பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு நடந்த பல சம்பவங்களை ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார். இப்படி இந்நூலில் உள்ள எல்லா கட்டுரைகளிலும் தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். -பரக்கத். நன்றி: துக்ளக், 28/8/2013.
—-
சிலப்பதிகாரத்தில் ஐந்திணைக்குரிய முப்பொருள்கள், மருதம்கோமகன், கோமகன் பதிப்பகம், 479ஏ, 8வது தெரு, பாரதிநகர் தெற்கு, கும்பகோணம் 612001, விலை 100ரூ.
தமிழர்கள் உருவாக்கிய இலக்கண நூல்கள் காட்டும் ஐந்திணைகள் பற்றிய செய்திகளை விளக்கி கூறுகிறது. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் ஐந்திணைகளுக்கு உரிய முப்பொருள்களை இயற்றினார். அந்த முப்பொருள்களான முதற்பொருட்கூறுகள், உரிபொருட்கூறுகள், கருப்பொருட்கூறுகள் ஆகியவை சிலம்பில் எவ்வாறு இடம்பெற்றிருக்கின்றன என்பதை ஆசிரியர் விளக்கத்துடன் இந்நூலில் தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 21/8/2013.