இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்-பெரு முதலாளிகளின் மறுபக்கம்
இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்-பெரு முதலாளிகளின் மறுபக்கம், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை 40, பக். 532, விலை 300ரூ.
மேடைப் பேச்சுத் தொனியில் 40 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. அரசு அதிகார மையங்களுடன் பெருமுதலாளிகள் கொண்டுள்ள தொடர்புகள் குறித்த ஏராளமான குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதையும் இந்நூல் விட்டுவிடவில்லை. சுமார் 60 ஆண்டுகால ஊழல்கள் அத்தனையும் இந்த நூலில் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூகத்தை உற்றுநோக்குவதற்கு இன்னும் கூடுதலான வாசிப்பு அவசியம் என்பதைக் குறிப்பால் உணர்த்தி, ஒவ்வொரு கட்டுரையிலும் படிப்பதற்கான ஏராளமான பரிந்துரைகளையும் செய்திருக்கிறார் ஆசிரியர். அரசியல், அதிகாரிகள், முதலாளிகள் கூட்டுக் கொள்ளையில் ஊடகங்களும் சேர்ந்து கொண்டு வாய்மூடி மௌனியாக இருந்த கதைகளும் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை எங்காவது பேசப்பட்ட, எழுதப்பட்ட குறிப்புகளின் அடிப்படையிலானவை. அந்தப் பதிவையும் நேர்மையுடன் செய்திருக்கிறார் ஆசிரியர். நன்றி: தினமணி, 9/12/13.
—-
இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்), ஜே.எம். சாலி எம்.ஏ, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து இந்திய வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களிலும், புராணங்களிலும், கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ள முன்னறிவிப்புகளை தொகுத்து அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளார் ஆசிரியர் ஜே.எம். சாலி. நன்றி: தினத்தந்தி, 11/12/13.