தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்
தமிழ் நாட்டில் கொத்தடிமைகள், திருமலை. செல்வகோமதி, சோக்கோ அறக்கட்டளை, பக். 16+320, விலை 150ரூ.
தமிழகத்தில் கொத்தடிமைகள் என்று நூலுக்குத் தலைப்பு அமைந்திருப்பினும், உலக அளவில் பல நாடுகளிலும் உள்ள கொத்தடிமைகள் பற்றி விரிவாக இதில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் பல லட்சம் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளனர் என்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கல்குவாரிகள் முதலிய இடங்களில் கொத்தடிமைகளைக் காண முடிகிறது. கொத்தடிமைகள் இல்லாமல் இருக்க சட்டங்கள் இயற்றப்பட்டும், அடிமை வாழ்க்கை தொடர்கதையாகவே உள்ளது. 1997 முதல் இன்று வரை அச்சமூட்டும் கடன் காரணமாக ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டனர் என்ற புள்ளி விவரமும், அடிமைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் படிப்போரை கலங்கச் செய்கின்றன. நாட்டில் அவல நிலை நீங்க, கல்வியில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற செய்தித் தொகுப்பாக அமைந்த ஆய்வு நூல். -ம.நா.ச. கிருஷ்ணன். நன்றி: தினமலர், 9/3/2014.
—-
கவிமணிதாசன் பாடல்கள் ஒரு சமுதாயப் பார்வை, வை.கோபாலகிருஷ்ணன், ஒளிவெள்ளம் பதிப்பகம், 12/221, அன்னை தெரசா தெரு, ஆசாரிபள்ளம் – 629201, பக்கங்கள் 96, விலை 40ரூ.
தேசிய உணர்வோடு கவிதை படைத்த பாரதியாரை குருவாக ஏற்றுக் கொண்டவர் பாரதிதாசன். அதே காலச் சூழலில் குமரிமாவட்டப் புலவர்கள் வரிசையில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையைத் தமது கவிதைத் தந்தையாகக் கொண்டு அவர்வழி நின்று கவிபாடியவர் கவிமணிதாசன். இயற்பெயர் சி.ஆதிமூலப்பெருமாள். கடவுள் முதல் காதல்வரை கவிபாடி தமிழன்னைக்குப் பல படைப்புகளை மாலையாகச் சூட்டியவர் கவிமணிதாசன். அவரது கவிதைகளை ஆய்வு செய்து அதனை நூலாகக் கொணர்ந்திருக்கிறார் இந்நூலாசிரியர். கவிஞர் கவிமணிதாசனின் கவிதை வளத்தைத் தமிழுலகம் அறிய இந்நூல் உதவும். நூலாசிரியர் ஆய்வுத்திறம் அடுத்த தலைமுறை ஆய்வாளர்க்கு உதவும். – இரா. மணிகண்டன். நன்றி: குமுதம் 6, மார்ச் 2013.