தஞ்சைப் பெரியகோயில்
தஞ்சைப் பெரியகோயில், முனைவர் வி.அ. இளவழகன், பூங்கொடித் தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை 160ரூ.
மழைநீர் சேமிப்பில் முன்னோடியாகத் திகழ்கிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எடுப்பிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில். இந்த ஆலயம் அமைந்துள்ள 3,32,000 சதுர அடி நிலப்பரப்பில் மாதம் மும்மாரி பொழிந்த தண்ணீரெல்லாம் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு நான்கு நீர்த்தாரைகளின் வழியே சென்று ஆலயத்தின் வடபுறம் உள்ள சிவகங்கைக் குளத்தை சென்றடையுமாம். இது சிவபெருமானின் திருமுடிமீது பொழியும் கங்கை நீராகக் கருதப்பட்டதாம். இப்படிச் சேகரிக்கப்பட்ட தூய மழைநீர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரைகூடத் தஞ்சாவூரின் சைவ உணவுச் சாலைகளில் சிவங்கி நீர் என்ற பெயரில் புனிதக் குடிநீராக வழங்கப்பட்டிருக்கிறது. தஞ்சைப் பெரியகோயிலை எடுப்பித்தவன் மாமன்னன் இராஜ ராஜன் என்பதைக் கோயில் கல்வெட்டுக்களின் உதவியோடு 1886ஆம் ஆண்டில் முதன்முதலாக எடுத்துரைத்தவர் ஜெர்மானியக் கல்வெட்டு ஆராய்ச்சியாளரான டாக்டர் இ.ஜே.டி.ஹீல்ஷ் என்பவர்தான். தஞ்சைப் பகுதியை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கனகசபைப்பிள்ளை என்ற அரசு அதிகாரியும் ஜேம்ஸ் ரோஸ் என்னும் கடல்வழிப் பயண அலுவலரும் இணைந்து பிரகதீசுவரப் பிரசாத் என்ற பெயரில் சரபேந்திர ராஜபட்டினத்திலிருந்து கப்பல் ஓட்டியிருக்கிறார்கள். இப்படி அரிய செய்திகள் பலவற்றைக் கேள்வி பதில் வடிவில் தருகிறார் முனைவர் வி.ஆ. இளவழகன். இலக்கிய, வரலாற்று ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் பெரு விருந்தாக அமையும். -சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 15/6/2014.
—-
குறளறம், புலவர் கோ. அருளாளன், செஞ்சி வட்டம் 604 152, பக். 240, விலை 150ரூ.
திருக்குறளின் பெருமையை உலகம் அறியும். குறைந்த சொற்களில் நிறைந்த கருத்துக்களை கொண்ட பெட்டகம். திருக்குறளுக்கு பொருளுரைத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. திருக்குறளின் உட்கருத்து மாறாமல் பலரும் இதற்கு பொருறுரைத்துள்ளனர். அந்த வகையில் இந்நூலின் ஆசிரியர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். இரண்டடி குறளின் கருத்துக்களை, தமிழ் சுவை ததும்ப பாக்களாக வடித்துள்ளார். அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பாக்கள் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். நன்றி: தினத்தந்தி, 2/7/2014.