புதியதேசம்
புதியதேசம், ப. திருமலை, புதிய தரிசனம், சென்னை.
சமூகப் பார்வை சமூகப் பிரச்னைகளைத் தேடிப்பிடித்து அதற்காக அலைந்து, திரிந்து தகவல்களைத் திரட்டி, அவற்றைச் சரிபார்த்து வழங்குவதே ஒரு செய்தியாளனின் முக்கியக் கடமை. அவ்வகையில் ப. திருமலை தன் பல்லாண்டு செய்தி உலக அனுபவத்தில் வழங்கி இருப்பதே புதிய தேசம் என்ற இந்நூல். இந்தியாவில் நீர் வழிச்சாலை தேவை, தமிழகத்தில் தொடரும் அரசியல் கொலைகள் பற்றிய ஆழமான கட்டுரை, சீமைக் கருவேல மரத்தினால் காலியாகும் கிராமங்கள், காவல்நிலைய மரணங்கள், தமிழர்களின் தற்கொலை மனஙப்பான்மை, கருக்கொலை, குழந்தை கடத்தல், குழந்தைத் தொழிலாளர் பிரச்னை ஆகிய தலைப்புகளில் விரிவான கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தலைக்கோதல் என்ற பெயரில் பராமரிக்க விரும்பாத முதியவர்களை அவர்களின் வாரிசுகளே தலையில் எண்ணெய் தேய்த்துக் கொன்றுவிடும் கொடூர நடவடிக்கை நம் மாநிலத்தில் நடைமுறையில் இருப்பதை அவர் எழுதுகையில் பதைக்கிறது. இப்போது சிலர் விஷ ஊசி போட்டுக் கொன்றுவிடவும் செய்கிறார். இந்தக் கட்டுரைகள் இல்லத்தில் அமர்ந்து எழுதப்பட்டவை அல்ல. விரிவான களப்பணிக்குப் பின்னர் எழுதப்பட்டவை என்பதும் ஆய்வாளர்களுக்கும் பிறருக்கும் தகவல் சுரங்கமாக அமையக் கூடியவை என்பதும் சிறப்பாகும். -மதிமலர். நன்றி: அந்திமழை, 1/6/2014.
—-
மின்னல் பூக்கள், லோகம் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
இந்த நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகள் கருத்தாழம் கொண்டவை. இளவல் ஹரிஹரன் அழகான சொற்களால் சரம் கோர்த்து, சிந்தனைக்கு விருந்தளிக்கும் கவிதைகளை வழங்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 30/4/2014.