இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா
இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா, டாக்டர் இரா.மோகன், சாகித்ய அகாதெமி, பக். 112, விலை 50ரூ.
பேராசிரியர் மீரா எப்படி கவிஞராய், போராளியாய், கட்டுரை ஆசிரியராய், பத்திரிகையாளராய், பதிப்பாளராய் பல்வேறு அவதாரங்கள் எடுத்து, அதில் வெற்றியும் கண்டார் என்ற வரலாற்றை டாக்டர் இரா. மோகன், நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து எழுதியுள்ளார். மீரா கவிதைகளில் அவரது மரப்புத் திறமையும் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் நூலில் அவரது வசன கவிதைத்திறனையும், குக்கூ, ஊசிகள் அங்கதச் சுவையின் அணிவகுப்பையும், கட்டுரைகளில் அவரது மொழி வீச்சையும், இந்நூலாசிரியர் ஆய்வுக் கண்ணோட்டத்தில் தந்துள்ளது மீரா பற்றிய ஆய்வுக்கு உதவும் அறிமுகங்கள். பாவேந்தர் பாரதிதாசனின் வாரிசாக மீரா எவ்வாறு பரிணமிக்கிறார் என்பதற்கு பல இடங்களை ஆதாரமாகக் காட்டுகிறார். அத்தனையும் ஆய்வுக் கண்ணோட்டத்திலேயே. நன்றி: குமுதம், 26/1/2015.
—-
புரட்சியாளர் சேகுவேரா, சித்தார்த்தன், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 100ரூ.
உலகம் முழுமைக்கும் மாற்றங்களை விரும்பும் இளைஞர்களின் ஆதர்ச போராளி சேகுவேரா. அவரது வரலாற்றை, அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை, அவர் சந்தித்த போராட்டங்களை, பெற்ற வெற்றிகளைத் தொகுத்து நூலாகத் தந்துள்ளார் சித்தார்த்தன். சேகுவேரா மருத்துவம் படித்தவராக இருந்தும் மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டது ஏன் என்ற கேள்விக்கு எளிமையான விளக்கம் இதில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள புரட்சியாளர்களுக்கு அவர் கடவுளாகக் காட்சி அளிப்பதை, அவர் மக்களுக்காக நடத்திய போராட்டங்கள் வழியும் வெற்றியின் வழியும் விளக்கும் பணியை நூலாசிரியர் மேற்கொண்டுள்ளார். அவரது கடிதங்கள், நாட்குறிப்புகள் படிக்கப் படிக்க சுவாரஸ்யம். அவர் மரணித்தாலும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்பதை காட்டும் இடங்கள் ஏராளம். நன்றி: குமுதம், 26/1/2015.