இரண்டாவது சுதந்திரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்
இரண்டாவது சுதந்திரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம், வடகரை த. செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், புஎ. 76, பஎ.27/1, பாரதீஸ்வரர் காலனி 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 100ரூ.
தகவல் பெற ஓர் கையேடு மத்திய அரசு கொண்டுவந்த உருப்படியான சட்டங்களில் ஒன்று தகவல் அறியும் உரிமையுச் சட்டம். இன்று அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு முக்கியப் பங்குண்டு. பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களே இச்சட்டத்தை பயன்படுத்தி தகவல் அறிவதைக் காண முடிகிறது. பாமர மக்களுக்கு இச்சட்டம் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இந்தக் குறையை இரண்டாவது சுதந்திரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நூல் நிச்சயம் போக்கும். இந்நூலில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி ஏ டூ இசட் வரை எல்லாத் தகவல்களையும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர் வடகரை த. செல்வராஜ். உள்ளாட்சி முதல் மத்திய அரசு வரை தகவல் அறிவதற்காக யாரை அணுக வேண்டும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், நிராகரித்தால் எப்படி மேல் முறையீடு செய்ய வேண்டும், இச்சட்டம் எங்கெங்குப் பொருந்தாது போன்ற பயனுள்ள தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இச்சட்டத்தின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொண்டால் மட்டுமே அரசின் செயல்பாடுகள் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். அப்போதுதான் மத்திய மாநில அரசுகளிடமிருந்து தேவையான விவரங்களைப் பெற்று பயனடைய முடியும் என்பது நிதர்சனம். நன்றி: தி ஹிந்து, 10/11/13.
—-
டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம், மு. நீலகண்டன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை 98, பக். 273, விலை 185ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-9.html
டாக்டர் அம்பேத்கரின் படைப்புகளை அரசியல், பொருளியல், சட்டவியல், சமூகவியல், சமயம் என வகைப்படுத்தி, அம்பேத்கரின் சிந்தனைகளைப் படிப்போர் மனதில் அழமாகப் பாயச் செய்திருக்கிறார் நூலாசிரியர். பகுத்தறிவு செயல்பட இடம் கொடுக்காத வேதங்களை வெடிவைத்துத் தகர்க்க வேண்டும், இந்தியாவில் பெண்ணின் வீழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனு தர்மம்தான் காரணம் என்பன போன்ற அம்பேத்கரின் சிந்தனைகள் நூலில் அதிகம் பேசுவதோடு சிந்திக்கவும் வைக்கிறார் நூலாசிரியர் மு. நீலகண்டன். அம்பேத்கரின் சிந்தனைகள் பற்றிய ஆய்வுக்கு இந்நூல் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழும் அளவுக்கு செரிவாக ஆக்கப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 5/12/12.