குமுதம் ஒரு பக்கக் கதைகள் 1999
குமுதம் ஒரு பக்கக் கதைகள் 1999, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 112, விலை 80ரூ.
பரபரப்பான இந்த உலகில் ஒரே மூச்சில் படித்து விட வேண்டும். அதே சமயம் ஒரு சிறுகதையைப் படித்த திருப்தி கிட்ட வேண்டும் என்ற வாசகர்களின் எண்ணத்தை குமுதம் ஒரு பக்கக் கதைகள்தான் தீர்த்து வைத்தன. கதை எழுத ஆர்வம் உள்ள அனைவரையும் குறிப்பாக வாசகர்களையும் எழுதவைத்தது இந்தக் கதைகள்தான். அன்றாட வாழ்வில் நடக்கும் எந்த ஒன்றையும் இந்தக் கதைகள் விட்டு வைத்ததேர இல்லை. கொலை மனசு, நூலைப்போல, சூது, வயசுக்கோளாறு, இன்டர்நெட் என்று தலைப்புகளே கதை சொல்லிவிடும். அதே சமயம் அதன் கடைசி வரி க்ளைமாக்ஸ் படிப்போரை புதிய தளத்தில் கொண்டுபோய் நிறுத்தும். அதுதான் ஒ.ப.க.கதைகளின் சிறப்பு. நிறைய எழுத்தாளர்களை உருவாக்கிய இந்தத் தொகுப்பை ஒருமுறை படித்தால் நீங்களும் எழுத்தாளராகிவிடுவீர்கள். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 23/7/2014.
—-
காஞ்சி மகானின் கருணை அலைகள், டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன், செங்கைப் பதிப்பகம், செங்கல்பட்டு, விலை 300ரூ
பத்திரிகை துறையைச் சார்ந்த இந்த நூலாசிரியர் சிறுகதைகள் நாவல்கள், ஆன்மிகக் கட்டுரைகள் என்று பல முன்னணிப் பத்திரிகைகளில் எழுதி வருபவர். இவர் ஸ்ரீ காஞ்சி மகான் என்றும், ஸ்ரீ மகா பெரியவர் என்றும் பக்தர்களால் அன்பொழுக அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் திவ்ய சரித்திரத்தையும், அவர் தம் பக்தர்களின் பக்திப் பிரவாஹம் பற்றிய தகவல்களையும் சேகரித்து இந்நூலில் தொகுத்துள்ளார். துறவுக்கும், கனிவுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்த பெரியவர், ஹிந்து மதத்தில் 20 ஆம் நூற்றாண்டில் அவதரித்த மஹரிஷிகளில் குறிப்பிடத்தக்கவர். இந்தியா முழுவதும் நடைப்பயணமாகவே சென்று ஆன்மிக சேவையாற்றியவர். அவரைப் பற்றி மகாத்மா காந்தியின் அனுபவங்கள் மற்றும் நேரடி உரையாடல்கள் தொடங்கி, அமெரிக்கா யாத்ரிகரான பால் பிரன்டன் என்பவருடனான ஆன்மிக மற்றும் உலகளாவிய உரையாடல்கள். மஹா ஸ்வாமிகளின் விஜய யாத்திரைகள். அப்போது நடந்த பக்தி கமழும் நிகழ்வுகள். இஸ்லாமியர்களை அவர் கௌரவித்த நிகழ்ச்சி. ராஜாஜி, காமராஜ், கரியப்பா, இந்திரா காந்தி போன்றவர்களுடனான சந்திப்புகள் இவற்றுடன் 30க்கும் மேற்பட்ட பக்தர்களின் பக்தி பிரவாஹ அனுபவங்கள் என்று இந்நூல் முழுவதும் ஸ்ரீ காஞ்சி மகானின் வெளிவராத பல பெருமைகள் படிக்கப் பரவசமூட்டும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன. -பரக்கத். நன்றி: துக்ளக், 23/7/2014.