கொங்கு நாட்டுப்புறக் கதைகள்
கொங்கு நாட்டுப்புறக் கதைகள், தி.பெரியசாமி, காவ்யா, சென்னை 24, பக். 176, விலை 135ரூ.
மனிதவாழ்வின் பல்வேறு உணர்வுப் பூர்வமான பகுதிகளை எந்தவித அலங்காரமுமில்லாமல் வெளிப்படுத்துபவை நாட்டுப்புறக் கதைகள். இந்நூலில் 110 கொங்கு நாட்டுப்புறக் கதைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கிராமத்து மக்களின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களால் பல ஆண்டுகளாகச் செவி வழியாகக் கூறப்பட்ட கதைகளை, அவற்றின் சுவை குன்றாமல் எழுத்துவடிவில் தந்திருக்கிறார் நூலாசிரியர். அன்பு, நேர்மை, ஒழுக்கம், தியாகம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளைக் கொண்ட மனிதர்களையும், சுயநலம், துரோகம், பிறருக்குத் துன்பம் ஏற்படுத்துதல் போன்ற இழி பண்புகளையும் கொண்ட மனிதர்களையும் உலவவிட்டிருப்பதுதான் நாட்டுப்புறக் கதைகளின் சிறப்பு. கடந்த கால கிராமத்து மக்களின் வாழ்க்கையை நமது கண்முன் கொண்டு வரும் சுவையான தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. கொங்கு பகுதி மக்களின் பேச்சு வழக்கை அப்படியே தந்திருப்பது நூலின் சிறப்பு. நன்றி:தினமணி, 9/1/2012.
—-
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், அம்மன் சத்தியநாதன், ஏஏபி அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/116, டி.பி. கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 184, விலை 150ரூ.
காமகோடி மாத இதழில் வந்த ஆன்முகத் தொடரின் தொகுப்பே இந்நூல். பல தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்திருந்தாலும், கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதுதான் நூலின் மையக்கரு. கணவன் மனைவி ஒத்த கருத்துடையோராக இல்லறம் நடத்தி வந்தாலும், அன்னதானம் செய்வதில்தான் அவர்களின் ஏழேழ் பிறவிக்கும் அது நன்மை செய்யும் என்பதை உணரவைக்கும் நூல். ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்லற வார்வில் சரிநிகர் சமானமான உரிமையை வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆன்மிகத்தைத் தாண்டி அறிவியல் சிந்தனை, காஞ்சிப் பெரியவர், ராமானுஜர், கவிஞர் கண்ணதாசன், குரு ராகவேந்திரர் இன்னும் எத்தனை எத்தனையோ பெரியவர்களின் அருமை பெருமைகளை நூலினைப் படிக்குந்தோறும் உணரலாம். நன்றி: குமுதம், 24/4/2013