பார்வைகள் மறுபார்வைகள்
பார்வைகள் மறுபார்வைகள் (கட்டுரைத் தொகுதி), நீல பத்மநாபன், திருவரசு பத்தக நிலையம், 23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை 17, பக். 260, விலை 100ரூ.
நீலபத்மநாபன் 2008 முதல் 2010 முடிய எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள், மதிப்புரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. என் படைப்புகள் மூலம் ஆத்ம சோதனையும், சுய உணர்தலும் பயில்வதின் வழி தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறும் நூலாசிரியர் நவீன காலத்தில் தமிழ் மொழி என்னும் கட்டுரையில் இனி வரும் எந்த மாற்றங்களையும் எதிர்கொண்டு புத்துயிர்ப்புடனும், புதுப்பொலிவுடனும் வாழும் திறனையும் தீரத்தையும் தமிழ் பெற்று விட்டிருக்கிறது என்னும் (59) நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளார். பாரதி கூறிய மாதிரி சிறுமை கண்டு சீறு, ரவுத்திரம் பழகு, ரசனையில் தேர்ச்சி கொள், நூலினை பகுத்துணர் என்பவை இலக்கிய சிருஷ்டியிலும் தாரக மந்திரங்களாக கருதப்படலாம்.(பக். 70) என்னும் நூலாசிரியரின் தலைமுறைகள், உறவுகள், பள்ளிகொண்டபுரம், மூன்று நாவல்களை அடுத்து இலை உதிர்காலம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நகுலன், ஜெயமோகன், கடற்கரய், கோதையூர் மணியன், ஜி. என். பணிக்கர், அனுபமா ராஜு, டேவிட் மில்டன் போன்றவர்களுடைய நேர்காணல்களால், நீலபத்மநாபனின் ஆழ்ந்த இலக்கியச் சிந்தனைகளும், அனுபவங்களும் இதில் விறுவிறுப்பைச் சேர்த்துள்ளன. நீலபத்மநாபனின் இலக்கிய தடயங்களையும், பிறமொழி இலக்கியத் தடங்களையும் வெகுவாக அறிந்து கொள்ளும்வகையில் பார்வைகள், மறுபார்வைகள் விசாலமாக ஊடுருவியுள்ளது சிறப்பாகும். -பின்னலூரான். நன்றி: தினமலர், 9/10/2011.
—-
நாகேஷ், தேங்காய் சீனிவாசன் பதில்கள், வைர ஜாதன், விஜயா பதிப்பகம், 15, பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை 70ரூ.
நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்ல, குணச்சித்திர வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர்கள் நாகேசும், தேங்காய்சீனிவாசனும், பொம்மை பத்திரிகையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தார்கள். அந்த கேள்வி, பதில்கள் புத்தக வடிவில் வெளிவந்துள்ளன. நடிப்பதில் மட்டுமல்ல, கேள்விகளுக்கு நச் என்று பதில் அளிப்பதிலும் இவர்கள் வல்லவர்களாக விளங்கி இருக்கிறார்கள் என்பது இந்தப் புத்தகத்தின் மூலமாகத் தெரிகிறது. நாகேசுக்கும், தேங்காய் சீனிவாசனுக்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்விக்கு தேங்காய் அளித்த பதில். புகழ் உருவில் அவர் என்னைவிட உயரமானவர். நிஜ உருவத்தில், நான்தான் அவரைவிட உயரமானவன். நன்றி: தினத்தந்தி, 8/2/2012.