மொழிப்போரை விவரிக்கும் உயிருக்கு நேர்
மொழிப்போரை விவரிக்கும் உயிருக்கு நேர், ம. நடராசன், தமிழ் அரசி பதிப்பகம், 189, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 16, விலை 300ரூ.
உயிருக்கு நேராக தாய் மொழியைப் பார்த்தவர்கள் தமிழர்கள். தமிழர்களின் நீண்ட வரலாற்றில் உணர்ச்சியும் கொந்தளிப்புமாக மொழியைக் காக்க நடந்த போராட்டம் எழுச்சியானது. தங்களுடைய உயிரைக் கொடுத்து மொழிகாக்க முயன்றவர்களின் உணர்வுகளால் தமிழகம் முழுக்க அலையடித்து எழுந்த போராட்டங்கள், துப்பாக்கிச் சூடுகள், ஏராளமான உயிர்ப்பலிகள், ஆட்சி மாற்றங்கள் என்று துவங்கிய மொழிப் போராட்டம் இந்த மண்ணில் நிகழ்ந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த மொழிப்போராட்டத்தின் பல்வேறு கூறுகளை அந்தந்த காலகட்ட பத்திரிகைகளிலும், நூல்களிலிருந்து தொகுத்துப் பதிவு செய்யப்பட்ட அபூர்வ நூலாகும். இதனை ம. நடராசன் தொகுத்துள்ளார். இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் தமிழர்களின் மொழியுணர்வையும், காலப்போக்கில் நிகழ்ந்த சரிவையும் ஒரு சேர உணரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நூலை படிக்கும்போது மொழிக்காக உயிர்நீத்தவர்களையும் நினைவு கூர்வதுடன், அவர்களுடைய மொழி உணர்வுக்கு நம்மை தலைவணங்கவும் வைக்கிறது. 528 பக்கங்களில் எழுதப்பட்ட இந்த நூலில், மொழிப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழறிஞர்களின் நேர்காணலும், தமிழ் அறிஞர்களின் அரிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
—-
ராக்பெல்லர், கார்த்தீபன், சிக்ஸ்த்சென்ஸ், 10/2, போலுஸ் குவார்ட்டஸ் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 100ரூ.
சாதாரண மர வியாபாரி வில்லியம் என்பவரின் மகனான ஜான் ராக்பெல்லர், எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக உயர்ந்த வரலாறு. கொடை உள்ளம் கொண்ட ராக்பெல்லர் நற்காரியங்களுக்கு ஒரு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கி வந்தார். புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகம் அவரது முயற்சியில் தோற்றுவிக்கப்பட்டது. வழக்குகளும், சோதனைகளும் அவரை விடாமல் துரத்தியபோதும் அவற்றை விடா முயற்சியாலும், புத்திக் கூர்மையாலும் திறமையாகச் சமாளித்து வெற்றி கண்டார். ஒரு நாவலைப் படிப்பது போன்ற உணர்வு இந்த நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 2/1/2014.