வடலூர் வாய்மொழி
வடலூர் வாய்மொழி, சாமி சிதம்பரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. To buy this Tami book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-8.html
பேரறிஞர் சாமி சிதம்பரனார், பல சிறந்த ஆய்வு நூல்களையும், இலக்கிய சமய நூல்களையும் ஏறத்தாழ 60 நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்துள்ள மூதறிஞர். இந்நூல் 1959ல் எழுதி வெளிவந்த நூல். ராமலிங்கர் வரலாறு எனத் துவங்கி 41 அத்தியாயங்களில் உண்மைக்கு வெற்றி என்ற தலைப்போடு நூல் நிறைவடைகிறது. வடலூர் வள்ளற் பெருமான் பாடல் வரிகள் மேற்கோள்களோடு, ராமலிங்கரது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் எளிமையாகத் தந்திருக்கிறார் சாமி சிதம்பரனார். திருவருட்பா சிந்தனைகளை சாறு பிழிந்து கொடுப்பதுபோல், அருட்சுவையாய் தந்துள்ளார் சிதம்பரனார். -குமரய்யா. நன்றி: தினமலர், 4/5/14.
—-
சிலம்புச் செல்வர் ம.பொ.சி., கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 176, விலை 75ரூ.
தமிழுலகில் உ.வே.சா., வ.உ.சி., தி.க.சி., கி.வா.ஜி., போன்ற மூன்றெழுத்துக்களில் தம் பெயரை நிலை நிறுத்தி வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் தமிழ் வேந்தர் ம.பொ.சி.யும் ஒருவர். அவர் இலக்கியத்திலும், அரசியலிலும், கட்சியிலும், பத்திரிகை உலகிலும், சொற்பொழிவு மேடைகளிலும், நூல்களை எழுதிக் குவித்த முறையிலும் இணையற்ற எழுத்தாளராகவும் நிகரற்ற பேச்சாளராகவும் திகழ்ந்து, தேசிய உணர்வு பெற்ற எழுச்சித் தமிழர். விடுதலைப் போரில் பங்கு கொண்ட சிந்தனைச் செம்மல். தன்னலமற்ற தியாகி. இவருடைய வாழ்க்கை வரலாறு இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக அமைகிறது. இவராலன்றோ சென்னையும் திருத்தணியும் கன்னியாகுமரியும் தமிழ் நாட்டிற்குக் கிடைத்தன. சிலப்பதிகாரம், குறள், கம்பன், பாரதி பற்றி அவர் ஆற்றிய பொழிவைக் கேட்டவர்கள் பேறு பெற்றவர்களாகத் தம்மைக் கருதுகின்றனர். சிலப்பதிகாரத்தில் இவருக்கு இருந்த ஆழ்ந்த புலமையையும், ஆராய்ச்சி அறிவையும் உணர்ந்த பேரா. ரா.பி. சேதுப்பிள்ளை சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை வழங்கினார். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை, இந்நூலால் அறிந்து கொள்ளலாம். ம.பொ.சி.க்கு சென்னை மாநகரில் ஒரு சிலை இல்லையே என்ற ஆசிரியரின் ஏ க்கம், அண்மையில் தீர்ந்தது. நூலில் உள்ள அச்சுப் பிழைகள், அடுத்த பதிப்பில் திருத்தப் பெறலாம். சிலம்புச் செல்வரின் சிறப்புகளை உணர்த்தும் சிறந்த நூல். -பேரா. ம.நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 4/5/14.