1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள்
1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள், திருவாரூர் அர. திருவிடம், நக்கீரன் பதிப்பகம், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 175ரூ.
மறைந்த பிரதமர் இந்திராகாந்தி 1984ம் ஆண்டு அக்டோபர் 31ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். அப்போது டெல்லியில் வாழ்ந்த சீக்கியர்கள் சந்தித்த கொடூரம், வெளிநாடுகளில் வாழ்ந்த சீக்கியர்களின் மனநிலை ஆகியவற்றை நூலாசிரியர் ஒரு திரைக்கதைபோல விவரித்துள்ளார். நூலின் ஆரம்பமே ஒரு எதிர்பார்ப்பை விளக்குவதாக இருக்கிறது. நேருவுக்கு பிறகு இந்திராகாந்தி இந்திய அரசியலில் பெற்ற முக்கியத்துவம், அவர் எடுத்த முற்போக்கான நடவடிக்கைகள் விரிவாக நூலில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவையும், சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவின் இந்திராகாந்தி காலம் வரையிலான வரலாற்றையும் ரத்தமும், சதையுமாக நூலில் விளக்கப்பட்டுளள்து. நன்றி: தினத்தந்தி, 12/2/2014.
—-
ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும், சேஷ. அனு. வெண்ணிலா, மேகதூதன் பதிப்பகம், சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 480, விலை 240ரூ.
ஞான தபோதனரை வா என்றழைக்கும் அண்ணாமலையின் மிக முக்கிய மகான்களுள் ஒருவர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். பகவான் ரமணரை தன் குழந்தை என்று கூறி மக்களுக்கு அர்ப்பணித்தவர். சுவாமிகளின் குழந்தைப் பருவம், ஞானோதயமடைந்து, மக்களால் சத்குருவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, அவரால் அனுகிரகம் பெற்றவர்கள் அவருடைய அற்புத லீலைகளை அனுபவப்பூர்வமாக உணர்ந்த நிகழ்வுகள் பற்றிய அற்புதத் தொகுப்பு இந்தநூல். குருவருள் அதியற்புதமானது. குருவாக்கின்படி நடப்பது கஷ்டம்போல தோன்றினாலும் பின்பு நமக்கு நன்மையே விளையும் என்ற உண்மையின் பல்வேறு அனுபவங்களை இந்நூலின் பக்கங்களை அலங்கரித்துள்ளன. கடவுள் எதிர்ப்புக் கொள்கை உள்ளவர்களின் உள்ளங்களையும், ஆன்மிக வாசனையே இல்லாத இல்லங்களையும்கூட குருவின் கருணை சென்றடையும் என்பதற்கு இந்நூல் சான்றளிக்கிறது. ஸ்தூலமாகவும், சூட்சுமமாகவும் மகான் சேஷாத்ரி சுவாமியின் கருணை பிரவாகத்தில் நனைந்தவர்களின் அனுபவங்களை விவரிக்கும் இப்புத்தகத்தை படிக்கும்போது குரு தரிசனம் கிட்டுகிறது. நன்றி: தினமணி, 20/1/2014.