வரலாற்றில் ஒளைவை
வரலாற்றில் ஒளைவை, முனைவர் ஜோ.ஆர், இலட்சுமி, மதன்மோகினி பதிப்பகம், பக். 184, விலை 150ரூ.
தமிழகம் மறக்க இயலாத பெண்பாற் புலவர் அவ்வையார் ஆவார். ஆத்திசூடியிலிருந்து அசதிக் கோவை வரை பல நூல்கள் இயற்றியவர். அறம், மறம், ஆன்மிகம் என, பன்முகப் பார்வையுடன் அவ்வை நூல்கள் திகழ்கின்றன. இந்நூலில் அவ்வையார் குறித்த பல செய்திகள், சுவைபடக் கூறியுள்ள பாங்கைக் காண்கிறோம். அவ்வை என்ற சொல்லின் பொருளும், அவரின் நோன்பும், வழிபாடுகளும் அவர் குறித்த செவி வழிச் செய்திகளும், அவ்வையின் ஆதிக்கம், வரலாற்று நோக்கில் கூறப்படும் செய்திகளும் படிப்பதற்குச் சுவையாக உள்ளன. ஆறு அல்லது ஏழு வகையான அவ்வையார் வாழ்ந்தனர் என்று நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். நாவல் மரத்திற்கும் நெல்லிக்காய்க்கும் நூலாசிரியர் கூறும் குறிப்புகள் (பக். 149) அனைவரும் படிக்க வேண்டியது ஆகும். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி:தினமலர், 17/11/13.
—-
இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி, யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17.
இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சியைப் பற்றி விரிவாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். இஸ்லாமிய வரலாற்றுத் தொகுப்பில் இந்திய முஸ்லிம் சுல்தான்களின் ஆட்சி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி துர்க், படான், அப்கான், சுல்தான்களின் ஆட்சி, 2ம் பகுதி முதல் சுல்தான்களின் ஆட்சி. கி.பி. 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் சுல்தான்கள் ஆட்சி செய்தார்கள். அவர்களுடைய ஆட்சியின் உண்மையான சரிதையை இந்நூல் 2 நூல்களில் விவரிக்கிறது. இந்திய நாகரிகத்தால் முஸ்லிம்களுடைய பங்கு, இந்திய இஸ்லாமியக் கலாசாரம், முஸ்லிம் ஸுபி ஞானிகளால் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள், இந்து முஸ்லிம் சமூகத்தார் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான நன்முயற்சி செய்தல் ஆகியவற்றைப் பற்றி தெளிவுபடுத்தியிருக்கிறார் நூலாசிரியர் சையித் இப்ராஹீம். எல்லோரையும் கவரக்கூடிய இந்நூல் வரலாற்று ஆய்வாளர்களுக்கு மிகப் பயனுள்ளதாய் இருக்கும். விலை முதல் தொகுதி ரூ. 190, 2ஆம் தொகுதி ரூ.225. இப்புத்தகம் தவிர ஆப்பிரிக்காவில் முஸ்லிம் ஆட்சி (விலை 180ரூ.) துருக்கியில் முஸ்லிம் ஆட்சி (ரூ. 160), ஐரோப்பாவில் முஸ்லிம் ஆட்சி (ரூ. 115) ஆகிய 3 நூல்களும் வெளிவந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 20/11/13.